பாளையங்கோட்டை மத்திய சிறை: 11 கைதிகள் இடமாற்றம் ஏன்? – சிறை கண்காணிப்பாளர் சொல்லும் காரணம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 போக்சோ கைதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

அதேபோல், தண்டனைக் கைதியான பால சுப்பிரமணியன் என்பவர் கடந்த மாதம் 27-ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். இதயநோய் பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பாளை மத்திய சிறை
பாளை மத்திய சிறை

இந்த சம்பவங்களால், கடந்த வாரம் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் பாளையங்கோட்டை சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஆய்வு செய்து சென்ற பிறகு, கடந்த 8-ம் தேதி ஆயுள் தண்டனை கைதியான ஜெபமணி என்பவரை சிலர் சந்தித்துச் சென்றனர்.

அவரை சந்தித்துச் சென்ற நபர்கள் குறித்து ஜெயிலர் முனியாண்டி விசாரித்தார். அவரை சந்தித்துச் சென்றவர்கள் கோவையைச் சேர்ந்த ரவுடிகள் எனத் தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஜெபமணியிடம் கேட்டதால், ஆத்திரமடைந்த அவர் ஜெயிலரின் நாற்காலியை எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக ஜெயிலர் முனியாண்டி, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் சக சிறை அலுவலர்களை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

தற்கொலைகள் மற்றும் சிறை அதிகாரி மீது தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி 3 கைதிகள் நாங்குநேரி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

அவர்கள் 3 பேரும் சிறை வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாளை மத்திய சிறை
பாளையங்கோட்டை மத்திய சிறை

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில், “பல்வேறு குற்றப் பின்னணியில் ஒரே இடத்தில் வாழும் சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்காக சிறை அலுவலர்கள் உட்பட பலர் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

கைதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் சிறையின் தலையாய கடமையாக உள்ளது. இந்த நிலையில், சிறைக் கைதிகள் தற்கொலை முயற்சிகள் மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன.

கைதிகள் நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுவது புதிதல்ல. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.