100 நாள் வேலை திட்டத்தில் ‘மகாத்மா காந்தி’ பெயர் இல்லையா? – வலுக்கும் சர்ச்சை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றத்திற்கு எதிராக தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

பயிர்காலம் அல்லாத நேரங்களில் இந்திய கிராமப்புறங்களுக்கு பேருதவியாக இருந்து வருவது இந்த ‘100 நாள் வேலை திட்டம்’.

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், 2008-ம் ஆண்டு இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இது இப்போது வரை காங்கிரஸ் ஆட்சியின் டாப் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை மாற்றி புதிய மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. அதன் படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை மாற்றி, ‘வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்று பெயரிடப்பட உள்ளது.

இதற்கு இப்போது இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்:

“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!

> தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

> 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

> இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

> பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

மூன்று வேளாண் சட்டங்கள், சாதி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!”

நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி:

“மகாத்மா காந்தியின் பெயரை ஏன் நீக்குகிறார்கள்? அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய தலைவர். எப்போது இந்த மாதிரி பெயர் மாற்றப்பட்டாலும், அந்தப் பெயரை ஆவணங்களில் மாற்ற வேண்டிய செலவு மிக அதிகமாக ஆகும்”.

இன்னும் பலர் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.