சென்னை மெரினா
சென்னை மெரினா கடற்கரை சாலையில் காற்று வாங்கி வந்தவர்கள், நவீன நடைபாதை அமைப்பின் காரணமாக, இன்று கடலில் கால் நனைத்து களிப்படைகிறார்கள்!
பரபரப்பான வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு பல பொழுதுபோக்கு தளங்கள் இருப்பினும், அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு இடம் என்றால் அது மெரினா கடற்கரை தான். என்ன தான் சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர் கடற்கரைகள் மக்கள் பொழுதுபோக்கு இடங்களாக இருந்தாலும், சென்னைக்கு வருவோரின் முதல் கனவு இடமாக மெரினா கடற்கரை தான் உள்ளது.
சென்னை மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொழுதுபோக்கு தளமாகவும், சென்னைக்கு புதிதாக வருவோருக்கு சுற்றுலா மையமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் முயற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

நீல கொடி திட்டம்
“நீல கொடி” திட்டத்தின் கீழ், 33 சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில், மெரினா கடற்கரை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றப்படுகிறது. மேலைநாட்டு கடற்கரைகளில் இருப்பதுபோல், மூங்கில் குடில்கள், மக்கள் இளைப்பாற சாய்வு மூங்கில் நாற்காலிகள், அழகுபடுத்தும் நோக்கில் புன்னை மரங்கள் நடவு பணிகள், மூங்கில் மரத்தால் செய்யப்பட்ட இருக்கைகள், கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் மெரினா கடற்கரை பரப்பே மாற்றம் பெற்று வருகிறது.
போர்டோ மேட்: நவீன நடைபாதை
இதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, மெரினா கடற்கரை புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 352 மீட்டர் நீளத்திற்கு, “போர்டோ மேட்” எனும் நவீன நடைபாதை அமைப்பு மாநிலக் கல்லூரிக்கு எதிரே உள்ள மணற்பரப்பிலிருந்து கரை வரையிலும் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை மணலில் எளிதில் சென்று வர வசதியாக, அலுமினியம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு சட்டங்களால் வடிவமைக்கப்பட்ட 10 பலூன் சக்கர நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த நடைபாதை வழியே தனது தாயை சக்கர நாற்காலியில் அமர்த்திக் கொண்டு கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்த தி.நகரைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் கூறுகையில், வயதான மூத்த குடிமக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது என்றார். முன்பு கடற்கரையில் இருந்தபடியே கடலை ரசித்து விட்டு சென்று விடுவோம். அப்படி உள்ளே வர வேண்டும் என்றாலும், அவர்களை காரிலேயே விட்டு விட்டு நாங்கள் கடலில் கால் நனைத்து விட்டு, சிறிது நேரத்தில் சென்று விடுவோம். தற்போது இந்தப் பாதை அமைப்பின் மூலம் நாங்கள் மனநிறைவை அடைகிறோம்.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு மகளிர் கூறுகையில், இதற்கு முன்பு சாலையில் இருந்து குழந்தைகளை தூக்கி கொண்டு கடற்கரைக்கு வருவது மிகவும் சிரமமாக இருந்தது.
தற்போது இந்த பாதை அமைக்கப்பட்டதால், சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமின்றி பல பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை செய்து கொடுத்த சென்னை மாநகராட்சிக்கு நன்றி!
தள்ளாத வயதிலும் கடலை நோக்கி நகர்ந்த முதிய தம்பதிகள் கூறுகையில், “முன்ன தூரத்தில நின்னு காத்து வாங்கிட்டு போயிடுவோம். இன்னிக்கு பீச்சில் கால் நினைக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக இருக்குது. எல்லா பீச் லயூம் இந்த நடைபாதை அமைப்பு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்” என்றனர்.

இந்த நடைபாதை அமைப்பைப் பற்றி நம்மிடம் விளக்கிய நடைபாதை அமைத்த ஸ்டோன்ஹான்ட்ஸ் (Stonehands)-ன் பொறியாளர் இனியவன் கூறியது, இது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்கின் கலவையால் செய்யப்பட்டதாகும்.
கடற்கரை நுழைவு பகுதியிலிருந்து கரை வரையிலும் 352 மீட்டர் நீளத்திற்கு, 423 “போர்டோ மேட்கள்” பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் பொழுதுபோக்கு சாதனங்களை எளிதில் அணுகுவதை உறுதி செய்ய தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பலர் கடற்கரை மணற்பரப்பில் நடப்பதில் சிரமப்பட்டு வெளியே பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இதனால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இதே போல மற்றொரு நடைபாதை மெரினாவில் அமைக்கப்பட இருக்கிறது.
