காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், வாக்குகள் திருடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகிறார். ஆனால் அவரது இக்குற்றச்சாட்டை தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தொடர்ந்து மறுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் ராகுல் காந்திக்கு கூட்டணி கட்சிகளிடமிருந்து பெரிய அளவில் ஆதரவு கிடைக்காமல் இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து ராகுல் காந்திக்கு ஷாக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
பாராமதி தொகுதி எம்.பியான சுப்ரியா சுலே தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ”இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் நான் நான்கு முறை வெற்றி பெற்றேன். எனவே அந்த இயந்திரம் குறித்து நான் கேள்வி எழுப்பமாட்டேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக பேசவும்மாட்டேன். எனவே அது குறித்து பெரிதாக சொல்ல எதுவுமில்லை. மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள பா.ஜ.கவிடமிருந்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரின் இக்கருத்து ராகுல்காந்திக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது. இதே விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், பா.ஜ.க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுவதாகவும், தேர்தல் கமிஷனை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துவதாகவும், இதனால் நாட்டின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் கமிட்டியில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை நீக்கியது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, மின்னணு வாக்குப்பதிவை கொண்டு வந்தது ராஜீவ் காந்தி என்றும், அதனை இப்போது அவரது மகன் எதிர்ப்பதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
