கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இனாம் நிலம் தொடர்பாக, நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரில் அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாநகர மாவட்ட செயலாளர் தண்டபாணி உள்ளிட்டோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர், கரூர் சுங்ககேட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பி. சண்முகம் பேசுகையில்,
“பல்வேறு விதமான தொழிலாளர்களுக்கு விரோதமான பல்வேறு புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஈடுபட்டு வருகிறது.
மத்திய அமைச்சரவை கூடி, பல்வேறு மசோதாக்களுக்கான கோப்புகளை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக, இன்றைக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை மாற்றி, ‘பூஜ்ஜிய பாபு’ சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர அமைச்சரவையில் அவர்கள் முடிவு செய்து, அதை சட்டமாக மாற்றத் தயாராகி வருகின்றனர்.

இதன் மூலம், 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் இருந்து, அந்தப் பெயரை மாற்றி ‘பூஜ்ஜிய பாபு’ என்று திட்டத்திற்கு பெயர் மாற்றப்பட உள்ளது. வேலை உறுதி என்பதைக் ‘வேலைவாய்ப்பு’ என மாற்றி அமைக்கவும் அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.”
ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி, ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பதைக் மாற்றி, அரசு அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்ற தேர்வு அரசு அதிகாரிகளிடம் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இத்திட்டம் அதிகமான மக்களுக்கு வேலை வழங்கக்கூடிய திட்டமாக உள்ளது. இத்திட்டத்தை மாற்றி அமைப்பது கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதைக் பட்டவர்த்தனமாக காட்டி செயல்படுவது போல ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாட்டு மக்களால் தேசத் தந்தை என்று போற்றப்படுகிற மகாத்மா காந்தியின் பெயரை ஒரு திட்டத்திலிருந்து நீக்குவதும், தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி மீது உள்ள ஒட்டுமொத்த வெறுப்பை பா.ஜ.க. அரசு பெயர் மாற்றத்தின் மூலம் வெளிப்படுத்த முனைவதும் கண்டனத்துக்குரியது.
அரசாங்கத்தால் வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை மாற்றும் போக்கை அனுமதிக்கத் தொடங்கினால், இதற்கு எல்லையே இருக்காது.

‘மின்சார சட்டம் 2025’
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘விதைகள் சட்டம் 2025’ என்ற புதிய சட்டத்தை பா.ஜ.க. ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. ‘மின்சார சட்டம் 2025’ கொண்டுவரப்பட உள்ளது.
காப்பீட்டு துறையில் நூறு சதவிகிதம் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்ட மசோதாக்களை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகிறது
. அணுசக்தி திட்டங்களில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
`பீகாரில் பா.ஜ.க.-க்கு கிடைத்த வெற்றி’
இவை அனைத்தும் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் பிரச்னைகள் என்றாலும், பீகாரில் பா.ஜ.க.-க்கு கிடைத்த அபரிதமான, எதிர்பாராத வெற்றியின் காரணமாக ‘எதை வேண்டுமானாலும் செய்யலாம்; நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது’ என்ற மனநிலையில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
இந்த வகையான, அடுக்கடுக்கான மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தீர்மானித்துள்ளது.
ஆகவே, பெரும்பான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மின்சார சட்டம்
குறிப்பாக, மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் அனுபவித்து வரும் விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மேலும் விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் சிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய விலை மின்சாரம் ஆகியவை அனைத்தும் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும்.

மின்சார கட்டமைப்பிற்குள் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதோடு, ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பும் சட்டத் திருத்தங்களில் உள்ளது. இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் ஆகியவை இல்லாமல் போனால், விவசாயிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.
ஆகவே, மத்திய அரசின் இந்த மின்சார சட்டம் உள்ளிட்ட முயற்சிகளை எதிர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில் பிரச்னை காரணமாக, அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ராதாகிருஷ்ணன் என்ற தனிநபர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு முன்னர் கோயில் நிர்வாகத்திற்கு மாநில அரசு பணம் செலுத்தியுள்ளது. அதன் அடிப்படையில்தான் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் என்ற நபர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விளைவாக, இன்று மக்கள் மற்றும் அரசாங்கம் ஒரு இடியாப்பச் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்; ஆனால் அவர்கள் நீதி வழங்கவில்லை என்று நான் குற்றம்சாட்டுகிறேன். மக்கள் தரப்பு கருத்து என்ன என்பதை கேட்காமல், தன்னிச்சையாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அது இயற்கை நீதிக்கு புறம்பானது.
இந்த அடிப்படையான விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், “நாங்கள் தீர்ப்பளித்து விட்டோம்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்து விட்டோம்; இல்லையெனில் மத்தியப்படையை பயன்படுத்தட்டுமா?” என்ற அளவிற்கு அவர்கள் நீதிமன்றத்தில் பகிரங்கமாக கேள்வி எழுப்புகின்றனர்.
மத்தியப்படையை அல்லது தொழில்துறை பாதுகாப்புப் படையை பயன்படுத்துவது நீதிபதிகளின் அதிகார வரம்பிற்குள் வராது. சாதாரண சிவில் சமூகத்திற்கு எதிராக படையை பயன்படுத்துவோம் என்று கூறுவது சட்டவிரோதமானது. அத்தகைய அதிகாரத்தை எந்தச் சட்டமும் நீதிபதிகளுக்கு வழங்கவில்லை. ஆனால் சமீப காலமாக இத்தகைய உத்தரவுகளை பிறப்பிப்பதை நீதிபதிகள் ஒரு போக்காக மாற்றிக் கொண்டுள்ளனர்.

வெண்ணமலை கோயில் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆழமாக வலியுறுத்தி, நீதிமன்றம் மூலம் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். எதிர்வரும் டிசம்பர் 18ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
மேலும், மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பறிக்கக்கூடிய சட்டங்கள் இந்தியாவில் இல்லை. இத்தகைய தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு, தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, அந்தப் புகாரை பாராளுமன்ற சபாநாயகரிடம் வழங்கியுள்ளனர். நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சாதகமாக செயல்படுவது, அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.
நீதிபதிகள் வரம்பு மீறி பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மாநில அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நீதிபதிகளே உருவாக்குவது, தமிழகம் போன்ற அமைதியான மாநிலங்களில், கண்டனத்துக்குரியது.
எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சட்டரீதியான போராட்டங்களை நடத்தி வருகின்றன. தகுதி பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது; அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
விடுபட்ட வாக்காளர்கள் பட்டியல் கிடைத்தால், அவர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான களப்பணிகளையும் மேற்கொள்வோம்” என்றார்.
