திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதிமுக, பாஜக தொடங்கி தவெக வரை அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளனர்.

திமுக-வுக்கு எப்போதுமே சோதனை கொடுப்பது கொங்கு மண்டலம் தான். இந்த முறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக ஏராளமான வியூகங்களை வகுத்து வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ளனர்.
கொந்தளித்த திமுகவினர்
அண்மையில் கோவை திமுக-வில் வார்டு, பகுதி, நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எஸ்ஐஆர் பணி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கோவை திமுக நிர்வாகியிடம் இந்த பிரச்னையை சொல்லி குமுறினார்கள்.

பணம் வாங்கிக் கொண்டு பதவி நியமிக்கப்படுவதாகவும் திமுகவினர் கொந்தளித்து வருகிறார்கள். இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளரிடம் நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோவும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விளாங்குறிச்சி பகுதியில் 9வது வார்டின் வட்ட செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, செந்தில் பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், “நாங்கள் திமுகவில் வகித்து வரும் பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறோம்.

எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளனர். அந்த கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக மயில்சாமிக்கு தொடர்பு கொண்டோம்.
“பத்திரிகைகாரங்களா.. அப்ப நான் அப்பறம் கூப்பிடறேன்.” என்று இணைப்பை துண்டித்துவிட்டார். நாம் மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து விளாங்குறிச்சி பகுதி திமுகவினரிடம் விசாரித்தபோது, “மயில்சாமியின் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இதனால் வட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, அதில் வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதையறிந்து மயில்சாமி, இந்த பிரச்னையை செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளார்.
தனக்கு கட்சியில் பெரிய ஆதரவு இருப்பதை காண்பிக்கும் விதமாக அந்தப் பகுதியில் உள்ள மற்ற நிர்வாகிகளிடமும் அவர் கையெழுத்து வாங்கியுள்ளார். கட்சி பதவி ராஜினாமா என்று உண்மையை சொல்லாமல் எஸ்ஐஆர் பணி, கட்சி பதவி நியமனம் என்ற வேறு காரணங்களை சொல்லி கையெழுத்து வாங்கி செந்தில் பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடைசியில் கடிதம் வெளியான பிறகு தான் கையெழுத்து போட்டவர்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மயில்சாமியிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.” என்றனர்.
