“யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும்” – TTV தினகரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, அமமுக-வை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலைதான் இன்றைக்குத் தமிழக அரசியலில் நிலவிவருகிறது. அதீத நம்பிக்கையில் நான் இதைச் சொல்லவில்லை. நான்கு முனை போட்டி வரும் போது அமமுக -வின் நிலைப்பாடு, தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நான், என்.டி.ஏ கூட்டணிக்கு வந்து விடுவேன் என நண்பர் நயினார் நாகேந்திரன் அவர் விருப்பத்தைச் சொல்கிறார்.

டி.டி.வி.தினகரன்

எதிரிகளை வீழ்த்தப் போகிறீர்களா, துரோகத்தை வீழ்த்தப் போகிறீர்களா என்றால், நாங்கள் இடம் பெறப்போகின்ற கூட்டணிதான் உறுதியாக வெற்றியடையும், ஆட்சி அமைக்கும். அது தான் இன்றைக்கு கள நிலவரம். இதை வைத்தே யாரை வீழ்த்தப்போகிறேன் எனப் புரிந்துகொள்ளலாம். அமமுக வெற்றிக்கூட்டணியில் இடம்பெறும். கேரளாவில் ஆள்கிற கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி நிறைய மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க திருவனந்தபுரம் நகராட்சியில் வெற்றி பெற்றுள்ளது. இதே முடிவு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

1952ல் இருந்து பல முறை எஸ்.ஐ.ஆர் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் நடத்தப்பட்டதில் பல குற்றச்சாட்டுக்கள் வந்தது. தமிழ்நாட்டில் யாருக்கு வாக்குரிமை உள்ளதோ அவர்கள் பெயர் நீக்கப்பட்டு விடக்கூடாது. இறந்தவர்கள் மற்றும் டபுள் என்ட்ரி நீக்கப்பட வேண்டும். யார் துரோகம் செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன். ஒரே கட்சியாக இணைய வேண்டும் என நான் என்றைக்கும் சொல்லவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு குடையில், ஓர் அணியாக திரண்டால் தான் இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலில் வெற்றி பெற முடியும்.

டி.டி.வி.தினகரன்

யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் இந்தத் தேர்தலில் உரிய பதிலை மக்கள் தருவார்கள். எல்லோரும் நீக்கப்பட்டது குறித்து என்னிடம் மன வருத்தத்தை சொல்லிய செங்கோட்டையன் ஒரு முடிவெடுத்து த.வெ.க-வில் இணைந்திருக்கிறார் என்ன நடக்கிறது என பார்ப்போம். கூட்டணி முடிவு தள்ளிப்போகிறது. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பு முடிவு செய்துவிடுவோம். எட்டு ஆண்டுகள் பல பின்னடைவுகளை தாண்டி என்னோடு பயணிக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் வார்த்தை தான் எனக்கு முக்கியம் அவர்கள் சொல்வது தான் என் முடிவு, அதை நான் செய்வேன்” என்றார்.