`பைனான்ஸ்’ வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் – நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார். அவர், தான் வெளிநாடுகளுக்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாகவும், தூத்துக்குடி துறைமுகம் அருகில் தனக்கு குடோன் இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் அகஸ்தீசனிடம் கேட்டுள்ளார்.

theft
theft

கடன் கொடுப்பது தொடர்பாக நேரில் பேசவும், குடோனை பார்வையிடவும் அகஸ்தீசன் கடந்த 10-ம் தேதி நெல்லைக்கு வந்துள்ளார்.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதே விடுதியின் மற்றொரு அறையில், கடன் கேட்ட சிவாவும், அவரது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் தங்கியுள்ளார்.

இரவு சுமார் 9 மணியளவில் சிவா வாங்கி வந்த உணவை அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றனர். அகஸ்தீசன் தனது அறையின் கதவை பூட்டாமல் மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்கியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அகஸ்தீசன் கண் விழித்துப் பார்த்தபோது எதிர் அறையில் தங்கியிருந்த சிவா மற்றும் அவரது மனைவி, குழந்தையை காணவில்லை.

இதனால், சந்தேகமடைந்து தனது அறையை சோதனையிட்ட போது மேஜையில் வைத்திருந்த 2 சவரன் தங்க செயின், ஒன்னேமுக்கால் சவரன் தங்க மோதிரம் மற்றும் தனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் தங்கச்சங்கிலி என சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை.

வெளியே வந்து பார்த்தபோது சிவா வந்த காரையும் காணவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அகஸ்தீசன் புகார் அளித்தார்.

theft
theft

அப்புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைகளை திருடிச் சென்றவர் ஹரிஹரன் என்பவர், சிவா என்ற பெயரில் அகஸ்தீசனுக்கு அறிமுகமாகி ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாக பொய்யான தகவலைக்கூறி அவரையும், அவரது மனைவியையும் நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், அகஸ்தீசன் மனைவியுடன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிஹரனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து நகைகளை மீட்டு அகஸ்தீசனிடம் ஒப்படைத்தனர்.