இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறியது. இதையடுத்து, அக்டோபர் 10, 2025 அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலமில்லாமல் போனது. அப்போதும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இந்த நிலையில், நல்லகண்ணுவிற்கு இப்போது மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அவர் விரைவில் உடல்நலத்துடன் வீடு திரும்புவார் என அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
