காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வின் இந்த வாக்கு திருட்டுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த புதன் கிழமை நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவையில் ராகுல் காந்திக்கும் அமித் ஷாவுக்கும் இடையே வாக்கு திருட்டு தொடர்பாக வாக்குவாதம் நடந்தது.

ராகுல் காந்தியின் உரையில், வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் உட்பட, சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்குமாறு அமித் ஷாவிடம் சவால் விடுத்தார். மேலும், தேர்தல் ஆணையத்தையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக சாடினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆவேசமடைந்த அமிஷ் ஷா, “நாடாளுமன்றம் ராகுல் காந்தியின் விருப்பப்படி செயல்படாது. எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் ஆணையம் பாராட்டப்படுகிறது தோல்வியடைந்தால் விமர்சிக்கப்படுகிறது.” என்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ‘வாக்கு திருட்டு’க்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும், இந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேல், “எங்கள் கட்சி ராம்லீலா மைதானத்தில் ‘வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்’ என்ற பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான போரை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இந்த பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள்” என்றார்.
ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ்,“ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தப் போராட்டத்துக்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஜார்க்கண்ட் முழுவதிலும் இருந்து கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரதிநிதிகள் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் டெல்லிக்கு வந்துவிட்டனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் போராட்டம் குறித்த அறிவிப்புக்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், “தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் நடுநிலையான நடுவர் இல்லை. இது உண்மையில் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நாங்கள் முழுமையாக ஒரு பிரசாரம் மற்றும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஐந்து கோடி கையெழுத்துகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாங்கள் சந்திப்பிற்கு நேரம் கேட்டுள்ளோம்… நாடாளுமன்றத்திலும் இந்த வாக்குத் திருட்டுப் பிரச்னை குறித்து விவாதித்தோம். எங்கள் தலைவர் நேரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விமர்சிப்பது மட்டுமல்லாமல், நாங்கள் தெளிவான ஆலோசனைகளையும் வழங்குகிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து நிறைய புகார்கள் உள்ளன.” என்றார்.
