“நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புறியா?” – ரவுடி தாக்கியதில் உயிரிழந்த கொரியர் ஊழியர்

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி, கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31) திருமணமாகாத இவர், கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார்.

மருதாநல்லுார், கரிகுளத்தெருவைச் சேர்ந்தவர் சிபி சக்கரவர்த்தி. ரவுடியான இவரின் பெயர் போலீஸார் ரவுடி பட்டியலில் உள்ளது. கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள்
கைது செய்யப்பட்ட ரவுடி சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பர்கள்

இந்நிலையில், சிபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு புகழேந்தி கொரியர் டெலிவரி செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது முதல் அவர் செல் நம்பரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ’ என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் சொல்லியுள்ளார்.

உடனே, ஆத்திரமடைந்த சிபிசக்கரவர்த்தி (33) தனது நண்பர்கள் சிலருடன் சென்று, கடந்த 8ம் தேதி, சிவபுரம் புறவழிச் சாலையில் புகழேந்தியிடம் பேசியுள்ளார். அப்போது நானே பெரிய ரவுடி என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் புகழேந்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் கேட்டதற்கு நாய் குறுக்கே வந்து கீழே விழுந்துட்டேன் என கூறி தாக்கியதை மறைத்து விட்டார்.

இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகழேந்தியை பரிசோதனை செய்த டாக்டர், இவர் விழவில்லை, யாரோ அடித்திருக்கிறார்கள் என அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்தவற்றை சொல்லியுள்ளார்.

உயிரிழந்த புகழேந்தி
உயிரிழந்த புகழேந்தி

இதற்கிடையில் உடல்நிலை மோசமான நிலையில், புகழேந்தியை, கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, புகழேந்தி உயிரிழந்தார்.

இது குறித்து, அவரது உறவினர்கள், நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிபிசக்கரவர்த்தி, இதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன்(26), கும்பகோணம், மேல கொட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணா(33), கும்பகோணம், முல்லை நகரைச் சேர்ந்த விக்னேஷ்(26), திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த குபேரன்(27) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிபிசக்கரவர்த்தி ரவுடி பட்டியலில், இருப்பதால் இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.