கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு மீண்டும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமென விரும்புகிறது.
விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான ஒரு பிரிவினர் த.வெ.க-வுடன் செல்லலாமெனக் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் வெளியான பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்குப் பெரும் சறுக்கலைக் கொடுத்தது. இதில், அகில இந்தியத் தலைமை அப்செட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகக் குழு ஒன்றை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்தக் குழுவை மாணிக்கம் தாக்கூர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள், ‘செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகக் குழுவை அறிவித்துவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் காங்கிரஸின் ஐவர் குழு தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியது. அப்போது, “வரும் தேர்தலில் 40 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் இருக்கும் தொகுதிகளை மாற்றக் கூடாது. நம் கூட்டணி பலமாக இருந்தால்தான் பா.ஜ.க-வை தமிழகத்துக்குள் கால் ஊன்ற விட முடியாது” எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க சார்பில் தேர்தல் பேச்சுவார்த்தைக்கு அறிவிக்கப்படும் குழுவுடன் பேசிக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், “கடந்த தேர்தலில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், விருத்தாச்சலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இந்த முறை அந்தத் தொகுதிகளை வழங்க வேண்டும்.
மேலும் செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபி, ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், மேலுார், மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் தொகுதிகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் வெற்றிபெறுவதற்கு எளிதாக இருக்கும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.” என்றனர்.
