சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப் பக்கமுள்ள அரசு நிலத்தில் சேர்த்து போடவும் என்று சரோஜா கூறியுள்ளார்.
இதை அறிந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன், மூதாட்டி சரோஜாவை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அர்ஜுனன், கொரோனா காலத்தில், ஓமலூர் டோல்கேட் அருகே போலீசாரை தாக்கிய வழக்கும் அவர் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் அதிமுகவில் எம்.எல்.ஏ, திமுகவில் எம்.பி, தேமுதிகவில் மாவட்ட செயலாளர் என இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருகிறார். மூதாட்டியைத் தாக்கியது மட்டுமின்றி, தொடர்ந்து ஊர் மக்களை மிரட்டி வரும் அர்ஜுனனைக் கைது செய்ய வேண்டும் என்று சரோஜா, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
