“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது”- அமைச்சர் ஜெய்சங்கரின் ‘அபாய குறியீடு’ உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல…

Jaishankar awarded honorary doctorate by IIM Calcutta
அமைச்சர் ஜெய்சங்கர்

சமகால வர்த்தக அமைப்பின் நீண்டகால உத்தரவாத நாடான அமெரிக்கா, தீவிரமாகப் புதிய ஈடுபாட்டு விதிமுறைகளை அமைத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டையும் பொதுவான விதிகளின் கீழ் கையாளாமல், தனித்தனியாகக் கையாள்வதன் மூலம் இதை நிறைவேற்றி வருகிறது.

உதாரணமாக, சீனா நீண்ட காலமாக அதன் சொந்த விதிகளின்படி அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்து செய்கிறது. ஆனால், இரு நாடுகளின் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த வர்த்தகத்தில் பல சிக்கல்கள் திட்டமிட்டு (வரிகளின் மூலம்) எழுப்பப்படுகின்றன.

உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன.

உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. இது, விநியோகச் சங்கிலிகளின் ‘மீள்தன்மை (Resilience)’ மற்றும் ‘நம்பகத்தன்மை’ ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

உலகளவில் நடந்துவரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் போன்றவை விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை அதிகரித்திருக்கின்றன.

Jaishankar awarded honorary doctorate by IIM Calcutta
அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளின் அடிப்படையில் சில வெற்றிகரமான ஆசிய பொருளாதாரங்களுடனான இடைவெளியை வேகமாகக் குறைத்துவருகிறது.

எந்தத் தரநிலைகளின்படி பார்த்தாலும் நாம் இப்போது முன்னேறி வருகிறோம். இந்தியாவால் ஏற்படும் முன்னேற்றங்களை உலகம் கவனித்து வருகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு, இன்று நாம் புதிய வர்த்தக ஏற்பாடுகளை உருவாக்கவும் மற்றும் புதிய இணைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.