‘இன்னும் 9 நாள்கள் தான்’ SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?

என்ன மக்களே… இந்நேரத்திற்கு உங்கள் வீடு தேடி சிறப்பு தீவிர திருத்தப் (SIR) படிவம் வந்திருக்கும்.

சிலர் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்திருப்பீர்கள். சிலர் இன்னும் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்யாமல் கூட இருக்கலாம்.

உங்களுக்கான நினைவூட்டல் தான் இது.

வருகிற டிசம்பர் 4-ம் தேதி தான், எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. இன்னும் 9 நாள்கள் தான் இருக்கின்றன. அதற்கு மேல், உங்களது படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று இதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

அதனால், விரைவில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். அந்தப் படிவத்தில் கேட்டிருக்கும் தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாக்குச்சாவடி அலுவலரின் உதவியை நாடலாம்.

எஸ்.ஐ.ஆர் படிவம் சம்பந்தமாக நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேதிகள் உங்கள் கவனத்திற்காக…

டிசம்பர் 4, 2025 – சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி.

டிசம்பர் 9, 2025 – ஜனவரி 8, 2026 – நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்த்து ஒரு பட்டியல் தயார் செய்யப்படும். அந்தப் பட்டியல் குறிப்பிட்ட இந்தத் தேதிகளில் உங்களுக்கு கொடுக்கப்படும்.

அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இந்தக் காலக்கட்டத்தில் ஆட்சேபனை செய்யலாம்… மேல்முறையீடு செய்யலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

டிசம்பர் 9, 2025 – ஜனவரி 31, 2026 – தேர்தல் ஆணையம் நீங்கள் செய்த ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டை சரிபார்க்கும்.

பிப்ரவரி 7, 2026 – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஆக, மக்களே சீக்கிரம் படிவத்தை நிரப்பி, சமர்ப்பியுங்கள்.