நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவாரப் பகுதிகளில் சுற்றி திரிகின்றன.
அத்துடன், அவ்வப்போது மலையடிவாரப் பகுதிகளில் உள்ள பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், அருணாச்சலபுரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றன.

பகல் நேரங்களில் புதர்களில் மண்டியிருக்கும் கரடிகள், மாலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
வீடுகள், டீக்கடைகள், உணவகங்களில் புகுந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால், ஆத்திரத்தில் அங்கிருக்கும் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் செல்கிறது.
ஒற்றை கரடியாக நடமாடிய நிலையில், சமீப காலமாக கரடிகள் கூட்டம், கூட்டமாக உலா வருகிறது.
உணவு தேடி அலைவதால், ஆக்ரோஷத்தில் தனியாகச் செல்வோரை தாக்கி வருவதால், வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவோர் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர்.
இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான கணபதி என்பவர், வழக்கம் போல் டீ குடிப்பதற்காக ஆம்பூர் மெயின் ரோட்டில் இருந்து தாட்டன்பட்டிக்கு மாலை சுமார் 5 மணியளவில் நடந்து சென்றுள்ளார்.
அங்குள்ள டீக்கடை பின்புறம் பதுங்கியிருந்த இரண்டு கரடிகளில் ஒரு கரடி, கணபதி மீது பாய்ந்து நகங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், சுதாரித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதில் இரண்டு கரடிகளும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. இதனையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து, கரடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கணபதியிடம் பேசினோம்.
“தினமும் மாலையில் டீ குடிப்பதற்காக அந்த டீக்கடைக்கு செல்வேன். ஆனால், அன்று டீக்கடை பூட்டியிருந்தது. இதனால், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தேன்.
என்னைப் பார்த்த கரடிகள் உறுமல் சத்தம் எழுப்பியது. நான் ஓடுவதற்குள் என்னை தாக்கியது. கரடியால் எனக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது” என்றார்.
தன்னந்தனியாக உலா வந்த கரடிகள், தற்போது கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
