Hongqi Bridge: சீனாவின் ‘ஹாங்கி பாலம்’ சரிவு – வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த ‘ஹாங்கி பாலம்’ (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது.

சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது.

பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின.

சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.