அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் என்ற பகுதி உள்ளது.

கார் கடத்தல்
கார் கடத்தல்

அங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் ஹூண்டாய் i20 கார் நின்றிருந்தது. அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தனர். அவர்களை பின்தொடர்ந்த கார், அதில் இருந்த இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்ணை அலறல் சத்தத்துடன் ஏற்றி கார் புறப்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் அங்கு திரண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடம்

அந்தப் பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கோவையில் பெண் கடத்தப்பட்டதாக இதுவரை காவல்துறைக்கு புகார் வரவில்லை. சூலூரில் இருந்து வந்த ஒரு கார் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டும் அவசர உதவி எண்ணான 100-க்கு புகார் அளித்தனர்.

சரவணசுந்தர்

பெண் காணவில்லை என்றும் காவல்துறைக்கு புகார் வரவில்லை. சிசிடிவி காட்சியிலும் காரின் எண் தெளிவாக இல்லை. இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார்.