US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி’ யார்?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

1969-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் மேயராகும் பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோருக்கு எதிராக ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

இதில், ஆண்ட்ரூ கியூமோவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் ஆகியோரின் ஆதரவு பெருமளவில் இருந்தது.

இந்தச் சூழ்நிலையிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான்.

“பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என்பதே ஜோஹ்ரான் முன்னெடுத்த முக்கிய பிரசாரம் ஆகும்.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

உகாண்டாவில் பிறந்த ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில், நியூயார்க் நகரத்தின் இளம் மேயராக இவர் பதவியேற்க உள்ளார். இவரது வயது வெறும் 34.

இவரது தந்தை உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி; தாய் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆவார்கள்.

ஜோஹ்ரான் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி

முக்கிய வாக்குறுதிகள் என்ன?

ஜோஹ்ரான் மம்தானி இனவேற்றுமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவருடைய தேர்தல் வாக்குறுதிகளாக இலவச குழந்தைகள் நலன், அரசே நடத்தும் மளிகைக் கடைகள், இலவச பேருந்து சேவை, போலீஸிடம் இருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை அமைத்தல் ஆகியவற்றை கூறினார்.

இதற்கான நிதி ஜோஹ்ரான் மம்தானிக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.

ட்ரம்ப் எதிர்ப்பு

இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் என்றும், தீவிர அச்சுறுத்தலாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “ஜோஹ்ரான் மம்தானி மேயராக வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு கிடைக்க வேண்டிய ஃபெடரல் நிதியை வெகுவாக குறைப்பேன்.

அவரது தலைமையின் கீழ் நியூயார்க் நகரம் வெற்றி பெறவோ, பிழைக்கவோ வாய்ப்பே இல்லை” என்று எச்சரித்திருந்தார்.

ஜோஹ்ரானுக்கு அனுபவமே இல்லை என்றும் அவர் சாடியிருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

எப்போது பொறுப்பேற்பார்?

இருந்தபோதும், இப்போது சூப்பர் வெற்றியை பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. இது டிரம்ப்‌க்கு எதிராக நியூயார்க் மக்கள் எடுத்த முக்கிய முடிவாகக் கருதலாம். காரணம், டிரம்ப் வெளிப்படையாகவே நிதியை காட்டி மிரட்டினாலும், 2 மில்லியனுக்கும் மேல் வாக்களித்து சாதனை வெற்றியை ஜோஹ்ரானுக்கு வழங்கியுள்ளனர் நியூயார்க் மக்கள்.

அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தில், டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரான ஒருவரை மேயராக மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மிக முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

ஜோஹ்ரான் மம்தானி வரும் ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார்.