கோவை: “எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம்” – துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது என்பது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான்.

 சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றைக்கு கோவை காரமடை ஒன்னிபாளையம் கிராமம் கருப்பராயன் கோயில் விளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகளுடன் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு மீண்டும் இரண்டாவது முறையாக விஜயம் செய்திருக்கிறேன்.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உண்மையில் எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். அதுவும் இந்த சம்பவம் நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல்துறையினுடைய பொறுப்பு.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

நிச்சயமாக காவல்துறையினர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட சகோதரிக்கும், அவரது பெற்றோருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாதது தான்.  சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.” என்றார்.