“அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!” – உறுதியாகச் சொன்ன அன்புமணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைய வேண்டும். ஊழல் தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க., பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறியுங்கள். இன்னும் ஆறு மாதங்களில் நம்முடைய கூட்டணியைச் சார்ந்த ஆட்சி வரும். வந்தவுடன் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைப்பேன்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மருத்துவர் அய்யாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று அய்யாவைச் சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க.வின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை, நான் அங்கே சேர மாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன்.

அய்யா ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகளாக இந்த மக்களுக்காக, தமிழ்ச் சமூகத்துக்காக, தமிழ்நாட்டுக்காக உழைத்து வருகின்றவர். ஆனால், அய்யாவை இன்று திசைதிருப்பி, அய்யாவின் மனதை மாற்றிய துரோகிகள் இருக்கின்ற வரை, அவரோடு சேர மாட்டேன் என்பதை வலியோடும் மனஅழுத்தத்தோடும் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 17-ம் தேதி மாநிலம் முழுவதும் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நடத்த இருப்பதாக அறிவித்துள்ளேன்.

உங்களுக்காக நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வேண்டியது உங்களுக்கான படிப்பும் வேலையும் தான்.

இந்தப் படிப்பையும் வேலையையும் ஸ்டாலின் நிச்சயமாக கொடுக்க மாட்டார்.

பென்னாகரம் பொதுக்கூட்டம்
பென்னாகரம் பொதுக்கூட்டம்

இனி நாம் ஏமாறத் தயாராக இல்லை. வன்னியர் சமுதாயத்துக்கு முதலமைச்சர் மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். வன்னியர் சமூக மக்கள் வரும் தேர்தலில் நம்முடைய ஒரு ஓட்டுக்கூட தி.மு.க.வுக்கு போகக் கூடாது. இது சாதி பிரச்சினை இல்லை, சமூகநீதி பிரச்சினை.

தி.மு.க. ஆட்சியை நாம் விரட்டியடிப்போம். தமிழ்நாட்டை இவர்கள் நாசப்படுத்தியது போதும். தி.மு.க. பிடியில் இருந்து மக்களுக்கு விடுதலை வேண்டும். இந்த சாராய ஆட்சி, பெண்களை நாசப்படுத்தும் ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரான இந்த தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, நம் உரிமைகளை மீட்டெடுப்போம்,” என்றார் ஆவேசமாக.