“பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும்” – ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது.

அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்காக இந்த கருத்தை அவர் கூறுவதாக விமர்சிக்கப்படுகிறது.

அணு ஆயுத சோதனை

சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாகவும் ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

“ரஷ்யாவும் சீனாவும் சோதனைகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் அதுபற்றி பேச மாட்டார்கள். ஆனால் நாம் அப்படியில்லை. நாம் வெளிப்படையான சமூகம். நாம் வேறுபட்டவர்கள். நாம் வெளிப்படையாகப் பேசவில்லை என்றால் செய்தியறிக்கைகள் விடுவார்கள். ஆனால் அங்கே அப்படி எழுதுவதற்கான நிரூபர்கள் இல்லை.

நாம் சோதனைகளை நடத்தப்போகிறோம். ஏனென்றால் அவர்கள் சோதனைகளை நடத்துகிறார்கள். மற்றவர்களும் நடத்துகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் சோதனைகளை நடத்துகிறார்கள்.” எனப் பேசியுள்ளார் ட்ரம்ப்.

அணு ஆயுத சோதனையைத் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்க ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்ற ட்ரம்ப், ரஷ்யாவின் மேம்பட்ட அணுசக்தி சோதனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் கடைசி அணு ஆயுத சோதனை 1992ம் ஆண்டு நடைபெற்றது. வட கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் கடந்த தசாப்தகாலமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்றாலும் மக்களுக்கு நடப்பது குறித்து தெரியவில்லை என வாதிடுகிறார் ட்ரம்ப்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது என ட்ரம்ப் கூறியிருப்பதைப் பொருட்படுத்தி இந்தியா கவனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமா அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பேச்சை கடந்து செல்லலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.