SIR: “பாதகமான வாக்குகளை நீக்குகிறார்கள்” – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் செயல்படுத்தவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது திமுக அரசு.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் SIR நடவடிக்கையை எதிர்ப்பது ஏன் என விளக்கியுள்ளார். அவர், “பீகார் மாநிலத்துல என்ன நடந்துருக்குங்கறத நீங்களே வெளிச்சம் போட்டு காட்டிட்டு இருக்கீங்க. இன்னைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நம்முடைய முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கிறது. அதில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கருத்துக்களையும் முதலமைச்சர் கேட்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவார்.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission – SIR

எங்கெங்க தேர்தல் நடக்குதோ அங்கதான் வந்து ஒன்றிய பாஜக அரசுக்கு சாதகமான வாக்குகளை மட்டும் வச்சுக்கிட்டு, அவங்களுக்கு பாதகமா இருக்கக்கூடிய எல்லாவற்றையும் நீக்குகிற பணிகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டுட்டு இருக்காங்க. இதற்கு நம்ம எதிர்ப்பு தெரிவிச்சிருக்கிறோம்.

தமிழ்நாட்டுல வெல்வதற்கான வாய்ப்பு பாஜகவுக்கு கிடைக்கிறது இல்ல. மக்கள் அந்த வாய்ப்பை அவங்களுக்கு கொடுக்கறது இல்ல. எனவே எப்படியாவது இதைப் பயன்படுத்தியாவது அவங்க வெற்றி பெறணும்னு முயற்சியில ஈடுபட்டுருக்காங்க.” எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து மழைக்காலத்தை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “நாங்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் தலைமையிலே அனைத்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரவச்சு தொடர்ச்சியா மீட்டிங் நடத்திகிட்டு இருக்கோம். இந்த வருஷம்னு கிடையாது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இதை முதலமைச்சர் வலியுறுத்திட்டு இருக்காரு.

Udhayanidhi Stalin

இந்த வருஷம் நிறைய பிரிபரேஷன் பண்ணிருக்கோம். ரெண்டு மூன்று நாள் நல்லா மழை பெய்ஞ்சது இப்ப விட்டுருக்கு.

இப்போ மழை விட்டதுனால இந்த கடந்த மூணு நாட்களாக ரோட் பேட்ச் ஒர்க்ஸ்லாம் எல்லா இடத்துலயும் வேகமா போயிட்டு இருக்கு…

அடுத்து ஒரு வாரத்துக்கு மழை இல்லைன்னு சொல்லிருக்காங்க. அரசு சைடுல இருந்து அனைத்து வேலைகளும் சிறப்பா பண்ணிட்டு இருக்கறோம். பொதுமக்களும் அவங்களுடைய ஆலோசனை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனப் பேசியுள்ளார்.