ஆந்திரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்: 10 பேர் பலி; பிரதமர், ஆந்திர முதல்வர் வருத்தம்!

இன்று ஏகாதசி என்பதால், அனைத்து முக்கிய கோயில்களுக்கும் பக்தர்கள் கூட்டமாகச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வகையில், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

ஒரே நேரத்தில் அதிகமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக கோவிலுக்குள் ஏறும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில், படிக்கட்டில் இடறி விழுந்து மூச்சுத் திணறி 10 பேர் பலியாகியுள்ளனர். பலரும் மூச்சுத்திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோயிலை நிர்வகிக்கும் தனியார் அமைப்பு, ஏகாதசி தினத்தில் இவ்வளவு கூட்டம் வரும் என்பதை முன்னதாக அறிந்தும், காவல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததும் இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு வழங்கி, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, “இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் துயரத்துடன், இனி வரும் காலங்களில் இத்தகைய கூட்ட நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்திரா கோயிலில் ஏகாதசி கூட்ட நெரிசல்
அந்திரா ஏகாதசி கூட்ட நெரிசல்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சம்பவத்தால் வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கச்சேரி கூட்ட நெரிசல், மெரினா கூட்ட நெரிசல், பெங்களூரு ஆர்.சி.பி கூட்ட நெரிசல், புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்புக் காட்சி கூட்ட நெரிசல், தளபதி விஜய் கரூர் கூட்ட நெரிசல் என, கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நம் நாடு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்வதில் சரியான விதிமுறைகள் மற்றும் முன் ஏற்பாடுகளை வரையறுப்பதில் உரிய நடவடிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும். மக்களும் குழந்தைகளை எந்தவொரு கூட்டம் நிறைந்த இடத்திற்கும் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.