Sudan: இரக்கமில்லாத மனிதர்கள், ரத்த ஆறு; சூடான் உள்நாட்டுப் போரில் RSF நடத்தும் கொடூர இனப்படுகொலை

சூடான் உள்நாட்டுப் போர்

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் கற்பனைக்கெட்டாத கொடூரங்கள் அரங்கேறி வருவதாக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அல் பாஷிர் நகரில் திட்டமிட்ட கொலைகள் மூலம் இனஅழிப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 2023 முதல் நடைபெற்று வரும் `விரைவு ஆதரவுப் படைகள்’ (RSF) என்ற துணை ராணுவ அமைப்புக்கும் சூடான் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருகின்றன.

இவை 2003 முதல் 2005 வரை நடந்த டார்பர் இனப்படுகொலையின் தொடர்ச்சியாகக் பார்க்கப்படுகின்றன.

Sudan President Abdel Fattah Al-Burhan

டார்ஃபர் மட்டுமல்லாமல் கோர்டோஃபான் மற்றும் கார்டூம் நகரத்தின் சில பகுதிகளையும் RSF கைப்பற்றியுள்ளது. தெற்கு சூடான் தனி நாடாக உருவாகி ஒரு தசாப்தத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், சூடானில் மீண்டும் மற்றொரு பிரிவு உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அல் பாஷிரில் நடந்திருப்பது என்ன?

அக்டோபர் 2025 கடைசி வாரத்தில் அல் பாஷிர் நகரைக் கைப்பற்றியுள்ள RSF அமைப்பு, 1,500 முதல் 2,000 பேரைக் கொன்றிருப்பதாக மனிதநேய அமைப்புகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் சூடான் மருத்துவர்கள் நெட்வொர்க் இதனை “உண்மையான இனஅழிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமான ஆராய்ச்சி ஆய்வகம் (HRL) வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கைகோள் படங்களின் அடிப்படையில் அல் பாஷிர் நகரத்தைப் பார்க்கும்போது மனித உடல்கள் ஆங்காங்கே கிடப்பதையும், இரத்தம் சில பகுதிகளில் ஆறாக ஓடியிருப்பதையும் காண முடிகிறது.

அல் பாஷிரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குண்டுவீச்சு, பட்டினி மற்றும் நீதிக்குப் புறம்பான மரண தண்டனைகள் மூலம் சுமார் 14,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நெட்வொர்க் கூறுகிறது. மேலும், சுமார் 12 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கொலைகள் மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் பதிவாகியிருக்கின்றன.

உள்நாட்டுப்போருக்கு காரணம் என்ன?

1989ம் ஆண்டு சூடானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி உமர் அல்-பஷீர், 2019ம் ஆண்டு மக்கள் போராட்டம் மற்றும் ராணுவத்தின் சதியால் தூக்கி எறியப்பட்டார்.

மக்கள் ஜனநாயகம் மலரத் தொடர்ந்து குரல் கொடுத்தனர். பின்னர் இராணுவ–பொதுமக்கள் கூட்டு அரசாங்கம் தொடங்கப்பட்டது. ஆனால் 2021ம் ஆண்டு அதுவும் தூக்கி எறியப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தது இரண்டு சக்திவாய்ந்த நபர்கள்.

முதலாவது — சூடான் ராணுவத்தின் தலைவரும், தற்போது நாட்டின் ஜனாதிபதியுமான ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான். இரண்டாவது — அவரது கூட்டாளியாக இருந்த RSF தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகாலோ (இவரை ஹெமேட்தி என அழைக்கின்றனர்).

சூடானை மக்களாட்சியை நோக்கி நகர்த்துவது குறித்த முன்னெடுப்புகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல், ஒரு லட்சம் வீரர்கள் கொண்ட துணை ராணுவப்படையான RSF-ஐ ராணுவத்துடன் இணைப்பது மற்றும் புதிய படைக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலும் முக்கிய முரண்பாடுகள் எழுந்தன.

இரு தளபதிகளும் தங்கள் பதவிகளை இழக்க விரும்பாததால், இருவருக்குமிடையே இணக்கம் ஏற்படவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

RSF Leader Hmedti.

RSF வீரர்கள் எல்லைப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டனர். இதனை சூடான் ராணுவம் ஆபத்தாக உணர்ந்ததால், கடந்த ஏப்ரல் 13, 2023 அன்று இருவருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. யார் முதலில் தொடங்கியது என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

மோதல் ஏற்பட்ட சில நாட்களிலேயே RSF கார்டூமின் பெரும்பகுதியை கைப்பற்றியது. தற்போது அவற்றில் சில பகுதிகளை ராணுவம் மீட்டுள்ளது.

கவலையளிக்கும் இனப்படுகொலை

RSF தொடர்ந்து பொதுமக்களை கொலை செய்வது, இனப்படுகொலை நடைபெறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நிறுவனம், RSF அரபு அல்லாத பிற சமூக மக்களை இனப்படுகொலை செய்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறியுள்ளது.

மசாலிட் உள்ளிட்ட பிற இனங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொலை செய்வதுடன், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் RSF வீரர்கள். இவர்களை “men with no mercy” எனக் குறிப்பிடுகின்றனர்.

ஐ.நா சபை

இதனை ஐ.நா மற்றும் அமெரிக்காவின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனாலும் RSF, இனப்படுகொலைக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) RSF-ன் இனப்படுகொலைக்கு நிதியளிப்பதாக சூடான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை UAE மறுத்துள்ளது.

சூடான் ராணுவம் மற்றும் RSF இடையேயான போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. குறிப்பாக அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கைகளில் ஈடுபாடு காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

ஐ.நா சபை விரக்தி

உலகின் பிற பகுதிகளில் நடக்கும் போர்களைப் போல ஆப்பிரிக்காவில் நடக்கும் போர்களை நிறுத்துவதற்கு நாடுகள் ஆர்வம் காட்டுவதில்லை என ஐ.நா சபை விரக்தி தெரிவித்துள்ளது.

குறிப்பாக டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பங்களிப்பைக் குறைத்திருப்பதனால் மனிதாபிமான உதவிகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

RSF-இன் இனவாதப் போக்கு தொடரும் சூழலில், அதன்பிடியில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன.