தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவியேற்பு; `சமூக நீதியா? இடைத்தேர்தல் நகர்வா?’ – பாஜக விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் கேப்டனுமான முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக, சூதாட்ட குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) 2000ஆம் ஆண்டு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட அசாருதீன், 2009ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கினார்.

அதே ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம் மொராதாபாத் தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்றார்.

முகமது அசாருதீன்
முகமது அசாருதீன்

ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2023ஆம் ஆண்டு தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு, பி.ஆர்.எஸ். வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக காங்கிரஸ் அமைச்சரவை அவரைப் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், தெலங்கானா அமைச்சராக அசாருதீன் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.

இதன் மூலம், தெலங்கானா அமைச்சரவை வரலாற்றில் முதல் இஸ்லாமிய அமைச்சராகும் பெருமையை அவர் பெற்றார்.

இருப்பினும், அவரின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பரிந்துரைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் அவர் அமைச்சராகத் தொடர முடியும்.

அசாருதீனை அமைச்சராக்கியது சமூக நீதிக்கான நடவடிக்கை என்று காங்கிரஸ் கூறுகின்ற நிலையில், இதை ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அரசியல் நகர்வாக பா.ஜ.க விமர்சித்து வருகிறது.

குறிப்பாக, 2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் தோற்றவரை, இப்போது அதே தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அமைச்சராக்கியுள்ளதாக பா.ஜ.க விமர்சிக்கிறது.

முன்னதாக, 2023 சட்டமன்றத் தேர்தலில் அசாருதீனை தோற்கடித்த பி.ஆர்.எஸ் வேட்பாளர் மகந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதத்தில் உயிரிழந்தார்.

அதற்கடுத்த மாதம்தான் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கு அசாருதீன் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது, நவம்பர் 11-ம் தேதி ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அசாருதீன் இன்று அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.