வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் – ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில்…

கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக வரி என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ட்ரம்ப். அமெரிக்கப் பொருள்கள் மீது அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்கிறது… அமெரிக்காவில் பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறை உள்ளது… என்று உலக நாடுகள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சகட்டு மேனிக்கு வரிகளைப் போட்டு தாக்கினார்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

இதில் பிற நாடுகளுக்கு கால அவகாசம் கொடுத்தாலும் சீனாவிற்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்கா மீது வரி விதிக்க, அமெரிக்கா மீண்டும் வரியை ஏற்றியது. இப்படி மாற்றி மாற்றி ஏற்றி சீனா மீதான வரிகள் 145 சதவிகிதம் வரை சென்றது… அமெரிக்கா மீதான வரி 110 சதவிகிதம் வரை சென்றது.

ஜூன் மாதம் சமாதானம் ஏற்பட இரு நாடுகளும் வரியை நிறுத்தி வைத்தது.

அதன் பிறகு, பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து வந்தது.

கூடுதல் 100 சதவிகிதம் வரி…

கடந்த மாதம், சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில கனிம வளங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. இது உலக வர்த்தகங்களைப் பாதிக்கும் என்று ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி என அறிவித்தார்.

இது வர்த்தக போராக உருமாறுமோ என்று நினைத்திருந்த நேரத்தில் தான், ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பிற்கு தயாராவதைப் போல, சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து இரண்டு தொகுதி சோயா பீன்ஸ்களை வாங்கியுள்ளது சீனா. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவது ட்ரம்பின் தொடர் எதிர்பார்ப்பு ஆகும்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

சந்திப்பு…

நாளை தென் கொரியாவில் ஆசியா – பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற ட்ரம்ப், ஜின்பிங் சந்தித்துகொண்டுள்ளனர்.

கடைசியாக, ட்ரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தப்போது சந்தித்துகொண்டார்கள். அதன் பிறகு, இப்போது தான் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.

இந்தச் சந்திப்பு தென் கொரியாவின் புசானில் நடந்தது.

என்னென்ன முடிவானது?

இந்தச் சந்திப்பின் முடிவில், சீனா மீது அமெரிக்கா விதித்திருந்த வரியான 57 சதவிகிதம் 47 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதாக கூறியுள்ளது.

அரிய கனிமங்களின் மீது சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளிலும் சமாதானம் எட்டப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து இன்னும் விரிவாக தெரியவில்லை.

இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மேலும் ஈடுபட முடிவு செய்துள்ளது.

இதனால்…

இந்தச் சந்திப்பிற்கு 10-க்கு 12 மதிப்பெண்களைக் கொடுத்துள்ளார் ட்ரம்ப். ஜின்பிங்குமே இந்தச் சந்திப்பில் திருப்தியாக உள்ளார். இதனால், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பாசிட்டிவ் முடிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல்.. உலக நாடுகளின் வர்த்தகங்களிலுமே ஒரு பாசிட்டிவிட்டியைத் தரும்.