(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
இந்தியா முழுவதும், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘வாக்கு திருட்டு’ எனவும், லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இருந்தபோதிலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா உள்பட 12 மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளிலும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியலில், அசாம் மட்டும் ஏன் இடம் பெறவில்லை என்கிற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், “இந்திய குடியுரிமை சட்டத்தில் அசாமிற்கு தனி பிரிவுகள் உள்ளன. மேலும் அங்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் குடியுரிமை சரிபார்ப்பு திட்டம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது”. “எனவே ஜூன் 24-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. ஆனால் அது அசாமிற்கு மட்டும் பொருந்தாது. எனவே அந்த மாநிலத்திற்கென்று தனி ஆணை பிறப்பிக்கப்படும்”என்று பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் நூறு சதவீதம் முழுமையானதாக இல்லை. இரட்டை வாக்குகள், இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யாமல் இருப்பது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது என அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் எனத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது என்பது இயல்பாக நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அதற்கு இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் சரியானதாக இல்லை என்பதற்கு 2023-ல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலே சாட்சியாக இருக்கிறது.
அந்த தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பேர் மற்றும் இறந்தவர்கள் 8 ஆயிரம் பேர் என வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. 2024 மக்களவை தேர்தலின்போது, சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் இறந்தவர்கள் உள்ளிட்ட 44 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி 31 ஆயிரம் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டன. எனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்பதை ஆராய்ந்தால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் தான். இந்த நடைமுறையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். பொதுவாக ஒரு சட்டசபை தேர்தலுக்கும், மற்றொரு சட்டசபை தேர்தலுக்கும் இடையே அவ்வப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மொத்தமாக வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பலமுறை வாக்களித்து இருப்பவர்கள் உள்பட புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்போர் என அனைவரும் புதிய படிவங்களை உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 2003ஆம் ஆண்டிற்க்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். கூடவே வாக்காளருடைய பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் ஓட்டுரிமை அப்படியே இருக்கும். இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும்.
இதனால் இந்த முறையை திமுக எதிர்க்கிறது. ஏனென்றால், பீகாரில் பலரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களால் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது. ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு
அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (“சார்”) என்பதன் நோக்கம் தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டது எனவும், நகரமயமாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் தான் இந்த தீவிர திருத்தம் செய்யப்படுகிறது எனவும் தனது நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுப்பது நியாயமானதாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டிலும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறை அல்ல
தேர்தல் ஆணையத்தின் ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது புதிய நடைமுறை அல்ல. ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நடைமுறைதான். கடந்த 2003ஆம் ஆண்டு இறுதியாக வாக்காளர் திருத்தம் என்பது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியானது.
அதன்படி, 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள், வாக்காளர் பதிவுப் படிவங்களை உரிய ஆவணங்களுடன் திரும்பவும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, 2003-க்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். கூடவே பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் ஓட்டுரிமை அப்படியே இருக்கும். அவ்வாறு இல்லையெனில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மாநில எல்லைகள் ஒரு தடையல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, ஒரு வாக்காளர், தற்போது வசிக்கும் மாநிலத்தின் முந்தைய சீராய்வுப் பட்டியலுடன் இணைப்பை நிரூபிக்க முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தின் கடைசியாகச் செய்யப்பட்ட சீராய்வுப் பட்டியலையும் பயன்படுத்த இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்த மாநில எல்லை கட்டுப்பாடு என்பது தற்போது நீக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர், இப்போது சென்னையில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால், அவரது பெயர் அல்லது அவரது பெற்றோர் அல்லது உறவினர் பெயர் மேற்கு வங்கத்தின் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும், அவர் தமிழ்நாட்டில் வாக்காளராக நீடிக்கத் தகுதி பெறுவார் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
இந்த மாற்றங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுவிடுமோ என்ற அச்சம் நீங்கி, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் எளிதாகவும், வெளிப்படையாகவும் தங்களை இணைத்துக் கொள்ள ஒரு தெளிவான பாதை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுகவில் தொடர்ந்து பரப்பி வரும் ‘திராவிட மாடல்’ என்று சொல்கிற மாயை வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதால் திமுக அஞ்சுகிறது.
