`இப்படியும் கொண்டாடலாம்’ – அன்று ராஜாவை தூக்கி எறிந்த வீரரை வென்ற குகேஷ்; சைலன்ட் ரியாக்‌ஷன் வைரல்

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் ஷோ டவுன் 2025 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் உலக செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவும் மோதினர்.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இதே போட்டியாளர்கள் மோதினர்.

இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை ஹிகாரு நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வென்றவர் தோற்றவரிடம் கை குலுக்குவதோ, அல்லது தலையசைத்து விடைபெறுவது என்ற வழக்கம் இருக்கிறது.

ஆனால், ஹிகாரு நகாமுரா வெற்றிப் பெற்றதும் குகேஷின் கிங் காயினைத் தூக்கி பார்வையாளர்களிடம் வீசினார். அவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது.

பலரும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்றும், சிலர் செஸ் போட்டிக்கே நடந்த மரியாதைக் குறைவு என்றும் விமர்சித்தனர். அதே நேரம் அந்தப் போட்டியே பார்வையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால், ஹிகாரு நகாமுராவின் செயலுக்கு ஆதரவும் இருந்தது.

இந்த நிலையில்தான் அதே போட்டியாளர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்தப் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் 2-வது சுற்றின், ஆட்டம் 1-ல் ஹிகாரு நகாமுராவை வீழ்த்தினார்.

நகாமுராவை வீழ்த்திய பிறகு குகேஷ் அமைதியாக, காய்களை அடுகிக்கி வைத்து வழக்கம் போல் மிக சாதரணமாக நடந்து கொண்ட விதம் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் இதயங்களை வென்றது. ‘நம்மை அவமானப்படுத்தியவரை இப்படியும் வெற்றிக்கொள்ள வேண்டும்’ என பலரும் குகேஷின் செயல்பாட்டை, இயல்பைப் பாராட்டிவருகின்றனர்.