“AI அமைச்சரின் 83 குழந்தைகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்வார்கள்” – அல்பேனியா பிரதமர் அதிரடி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது.

ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது.

அல்பேனிய பிரதமர் எடி ராமா
`AI அமைச்சர் டயல்லா’ குறித்து அல்பேனிய பிரதமர் எடி ராமா

தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் (Global dialogue) மாநாட்டில் அறிவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நாடாளுமன்ற உறுப்பினார்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு “குழந்தையும்” ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனிப்பட்ட உதவியாளராக செயல்பட்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை பதிவு செய்வது, அமர்வுகளின் சுருக்கங்களை வழங்குவது, விவாதங்களின் போது பதில்கள் பரிந்துரைப்பது போன்றவற்றில் உதவும் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்தை ஒரு பெரிய சவால் என்று குறிப்பிட்ட அந்நாட்டின் பிரதமர் கூறுகையில், “முதல் முறையாக டயல்லா 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

ஒவ்வொரு “குழந்தையும்” சோசியலிஸ்ட் கட்சி எம். பி களுக்கு உதவியாளராக இருப்பர். நாடாளுமன்ற நடப்புகளை பதிவு செய்வது மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிந்துரைகளும் வழங்குவர்” இக்குழந்தைகளுக்கு அவர்களின் தாயாரைப் போன்ற அறிவு இருக்கும்.

AI அமைச்சர் டயல்லா
AI அமைச்சர் டயல்லா

எடுத்துக்காட்டாக, நீங்கள் காப்பி குடிக்க சென்றுவிட்டு வேலைக்குத் திரும்ப மறந்துவிட்டால், நீங்கள் இல்லாதபோது நடந்த விஷயங்களை இந்த குழந்தை சொல்வதோடு மட்டுமில்லாமல் நீங்கள் யாருக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கூறும் ” என்கிறார்.

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு, இந்த ஏ.ஐ. அமைச்சகம் முழுமையாகச் செயல்பட இருக்கிறது. இத்திட்டம் 2026-க்குள் நிறைவுபெற்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.