கேரளாவிலும் ‘SIR’ : “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்” – கேரள முதல்வர் பினராயி விஜயன்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்கிறது.

‘இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் சதிச்செயல்’என இதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின், பினராயி விஜயன்
ஸ்டாலின், பினராயி விஜயன்

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “‘SIR’ எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த ‘SIR’ நடவடிக்கையை “ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்” என குறிப்பிட்டு, “கேரளாவிலும், தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் பட்டியல்களில் ‘சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision – SIR)’ நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது. இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.

பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது. ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்த்து, ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.