“காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?” – ஆய்வில் வெளியான தகவல்

அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேட்டிங் டாட் காம் நடத்திய ஆய்வின்படி அமெரிக்காவில் 59% பேருக்கு ஹாலோவீன் தினம், ஆண்டின் மிக உணர்ச்சி ரீதியான கடினமான நாளாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர் இதை காதலர் தினத்தை விட வேதனையும் தனிமையும் அதிகம் இருக்கும் நாளாகக் கூறியுள்ளனர்.

இந்தத் தினத்தில் தங்களுக்கான உடைகள் இல்லாமல், துணை இல்லாமல், குடும்பப் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்கள் இல்லாமல் அவர்களின் மனநிலை மிகவும் தனிமை உணர்வதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

hallowen celebration REP image
hallowen celebration REP image

சமூக ஊடகங்கள் அவர்களின் தனிமையை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அங்கே பகிரப்படும் புகைப்படங்களாலும் அல்லது சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளதாகப் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

சமீபத்தில், ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், “தனிமையைப் போக்கும் மருந்தாக இந்தச் சமூக ஊடகங்கள் அமையவில்லை. மாறாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற தளங்கள் அதிகம் பயன்படுத்துவதால் தனிமை உணர்வு மேலும் வலுப்பெறுகிறது” என்று தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்க மக்களில் சுமார் 50% பேர் ஏற்கனவே தனிமையில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது கொரோனா பிந்தைய காலங்களில் மேலும் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.