ரத்ததான முகாம்: “கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது” – தன்னார்வலர்கள் வேதனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை.

இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார். தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான முகாம் நடத்துவதில் ஆர்வமுள்ளவர்களை விருதுநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்திருந்தனர்.

விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா
விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா

இவர்களுக்கு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி பலர் தங்களது சொந்தப் பணிகளை விட்டுவிட்டு, பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டதால், பலர் 9 மணிக்கே 6வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு வந்து காத்துக்கிடந்தனர். ஆனால், காலை 10.30 மணியான போதும் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னார்வலர்கள் காலதாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்தனர்.

எப்போது நிகழ்ச்சி துவங்கும், எப்போது கலெக்டர் வருவார் எனக் கேள்வி எழுப்பினர்.

சான்றுகள் வழங்கும் நிகழ்வு
சான்றுகள் வழங்கும் நிகழ்வு

இதையடுத்து அங்கிருந்த, அரசு மருத்துவமனை இரத்த வங்கி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் ஜெயசிங்கிற்கு தகவல் கிடைத்தது. விரைந்து கூட்ட அரங்கிற்கு வந்த முதல்வர், இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கூறுகையில்,

“கலெக்டர் கையால் சான்றிதழ் பெறப் போகிறோம் எனப் பெருமையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். ஆனால் வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு எங்களை நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே இருந்திருக்கலாம். பாராட்டுகளை எதிர்பார்த்தா? இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்காகவே உயிர் காக்கும் இச்சேவையை செய்து வருகிறோம்.

அதேவேளை, மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான பணிகள் இருந்தால் முதலிலேயே வரமாட்டார் என அறிவித்திருக்க வேண்டும். அல்லது வேறொரு தினத்தில் கூட இந்நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.