போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனால், சிறுமியின் தாயார் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை கவனித்துக்கொள்வதற்காக சிறுமி அத்தையுடன் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

இதற்கிடையில், சிறுமியின் அத்தைக்கு இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ கந்தனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஶ்ரீ கந்தனுக்கு சிறுமியை அறிமுகப்படுத்தி, அவருடன் இரவு தங்குவதற்கு வற்புறுத்தியிருக்கிறார்.

சிறுமி மறுத்தபோதெல்லாம், பரிசுப் பொருள்களைக் கொடுத்திருக்கிறார். 2022 முதல் 2023 வரை ECR-ல் உள்ள ஸ்ரீ கந்தனின் பங்களாவில் இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை நடந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், சிறுமியின் சொத்து விவகாரம் தொடர்பாக சிறுமிக்கும், அவரின் அத்தைக்கும் வாக்குவாதம் எழுந்தபோது, ஶ்ரீ கந்தனுடன் சிறுமி இருந்த வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அத்தை மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், பாட்டியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த சிறுமியின் தாயாரிடம் நடந்தவைகளைத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் ஶ்ரீ கந்தன் மீதும், சிறுமியின் அத்தை மீதும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கும் முன்பும் ஶ்ரீ கந்தன் மீது ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது வருங்கால மனைவியை கடத்தி மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.