அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார்.
அதன் பின்னர் உண்மை என அறிந்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தில் உள்ள வெஸ்ட்லாந்து பகுதியை சேர்ந்தவர் வாலரி வில்லியம்ஸ். 65 வயதான இவர் லாட்டரி செயலியை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்திருக்கிறார். தனக்கு பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது. அதை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் வில்லியம்ஸ்க்கு லாட்டரி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.
அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வென்றதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் முதலில் இதனை மோசடி அழைப்பு என்று அவர் நினைத்துப் புறக்கணித்திருக்கிறார்.
அதன் பின்னர் லாட்டரி அதிகாரிகளிடம் அது குறித்து அவர் கேட்டு தகவலை உறுதிப்படுத்திய பிறகு உண்மையை அறிந்துகொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“லாட்டரி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தபோது அது ஒரு மோசடி அழைப்பு என நினைத்துப் பதில் அளிக்கத் தயங்கினேன். ஆனாலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கத்தான் அழைப்பை ஏற்றேன். அதன் பிறகு பரிசுத்தொகை பற்றி எனக்குக் கூறிய பிறகு நம்பவில்லை. அதிகாரிகளிடம் விசாரித்தபின் உண்மை என அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தேன்” என்று கூறுகிறார் வில்லியம்ஸ்.