உலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் – என்ன நடந்தது?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனாவும் அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது.

அதன் பின், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்த வரிகள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது அமெரிக்கா சீனா மீது 30 சதவிகித வரியை விதித்துள்ளது.

Donald trump - டொனால்ட் ட்ரம்ப்
Donald trump – டொனால்ட் ட்ரம்ப்

சீனா செக்

இந்த நிலையில், கடந்த வாரம், சீனா தனது அரிய கனிம வளங்களின் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அவை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

இது இந்தியா, அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளைப் பாதிக்கும்.

பெரும்பாலான உலக நாடுகளுக்கு சீனா தான் அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதற்கு சீனா கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, உலக நாடுகளில் உற்பத்திகள் பாதிக்கும்.

ஏற்கெனவே ட்ரம்ப் வலியால் பாதித்துள்ள உலக நாடுகளுக்கு இது கூடுதல் நெருக்கடியைத் தரும்.

ட்ரம்ப் உத்தரவு

இதனையடுத்து தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலக நாடுகளை மிகவும் பாதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூடுதல் வரி வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

இதனால், நவம்பர் 1-ம் தேதி முதல், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 130 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

இதற்கு சீனா என்ன எதிர்வினையாற்றும் என்று நினைக்கிறீர்கள் மக்களே?