`முதுகுவலியை குணப்படுத்த’ – 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்த 82 வயதான ஜாங் என்பவர், பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக அவர் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்தும், அவருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நாட்டு வைத்திய முறை குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதன்படி உயிருடன் தவளைகளை விழுங்கினால், முதுகுவலி உடனடியாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வினோதமான வைத்தியத்தை முழுமையாக நம்பிய ஜாங், அருகிலிருந்த நீர்நிலையில் எட்டு சிறிய தவளைகளைப் பிடித்து, அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உயிருடன் விழுங்கியுள்ளார்.

தவளைகளை விழுங்கியபின் மூதாட்டி ஜாங்கிற்கு எதிர்பாராத விதமாக கடுமையான வயிற்று வலியும், குமட்டலும், உடல் சோர்வும் ஏற்பட்டதாக சவுத் மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரின் குடும்பதார்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்த தவளைகளின் எச்சங்களால் ஏற்பட்ட கடுமையான தொற்று மற்றும் செரிமானக் கோளாறுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர்.

மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக, மூதாட்டி ஜாங்கின் உடல்நிலை படிப்படியாக தேறி தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.