“2014-ல் நான் கண்ட கனவு இதுதான்” – பிரதமர் மோடியின் உரை

மராட்டிய மாநிலம், நவிமும்பையில் ரூ.19650 கோடி செலவில் தாமரை வடிவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று 2014-ல் நான் கனவு கண்டேன். இதை நிறைவேற்ற, நாடு முழுக்க பல விமான நிலையங்களை கட்டவேண்டியது முக்கியம் என உணர்ந்தேன். 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்களே இருந்தன; தற்போது இந்த எண்ணிக்கையை 160-க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளோம்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவை உலகளாவிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (MRO) மையமாக மாற்றுவதே நமது இலக்கு.

நவி மும்பை விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கும். இன்று, மும்பை முழுவதும் எளிதாகப் பயணிக்க நகரம் முழுவதும் நிலத்திற்கு அடியே செல்லும் மெட்ரோ சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை போன்ற ஒரு நகரத்தில் இவ்வளவு கவனமாக கட்டுமானத்துடன் நிலத்தடி மெட்ரோவைத் தொடங்குவது ஒரு பெரிய சாதனை.

பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க ஜிஎஸ்டி சீர்திருத்தம் வழிவகை செய்துள்ளது; இதனால் இந்த நவராத்திரியில் மக்களின் செலவு விகிதம் உயர்ந்துள்ளது உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில் இந்திய பணத்தை நாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.

பிரதமர் மோடி

காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளை பலப்படுத்தியது. இந்தத் தவறுக்காக நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களை பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை.” என்று பேசியிருக்கிறார்.