ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 8-ஆவது வார்டில் நந்தவனத்தோட்டம் என்ற பகுதி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மாவட்ட அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிளக்ஸில், 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்கு கேட்டு வந்தபோது, அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்வதற்கு கூட இப்பகுதிக்கு வரவில்லை. ஆகவே, மீண்டும் ஒருமுறை எங்கள் பகுதிக்கு பொய்யான வாக்குறுதிகளை சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வராதீர்கள் என அச்சிடப்பட்டிருந்தது. அந்த பிளக்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தோம்.

நம்மிடம் நந்தவனத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தீனா என்கிற ஜெலாலுதீன் என்பவர் பேசினார். “கடந்த 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அமைச்சர் முத்துசாமி நான் ஈரோடு மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றால், நந்தவனத்தோட்டம் பகுதிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்துகொடுத்துவிட்டுதான் பதவியேற்பேன் என்றார். ஆனால், அதன்பின் நந்தவனத்தோட்டம் பகுதியை அவர் எட்டிப்பார்க்கவே இல்லை. எங்கள் தொடர் கோரிக்கையின் விளைவாக ஒருமுறை மட்டும் இந்தப் பக்கம் வந்து ஆய்வு செய்துவிட்டு போனார். அவருக்கும், 8-ஆவது வார்டு உறுப்பினராக இருக்கும் ஆதிஸ்ரீதருக்கும் இடையே அரசியல்ரீதியான ஈகோ பிரச்னை உள்ளது. இதனால், எங்கள் வார்டுக்கு எந்த திட்டங்களையும் அமைச்சர் முத்துசாமி செய்து கொடுக்கவில்லை. இதன் விளைவாகவே அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளோம். இன்று இரவு நந்தவனத்தோட்டம் பகுதி மக்கள் ஒன்றுகூடி ஆலோசித்து நாளை அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றவுள்ளோம்” என்றார். இதுதொடர்பாக விளக்கம் பெற அமைச்சர் முத்துசாமியைத் தொடர்பு கொண்டோம். அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

8-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான ஆதிஸ்ரீதரிடம் பேசினோம், “நந்தவனத்தோட்டம் பகுதியில் எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.எனக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பகுதியில் சாலையைவிட வீடுகள் கீழே உள்ளது. இதனால் மழை நீர் முழுவதும் வீட்டுக்குள் சென்றுவிடுகிறது. சிலர் வேண்டுமென்றே பொய்யான பிரசாரத்தை பரப்புகின்றனர்” என்றார். இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினத்திடம் பேசினோம்.”8-ஆவது வார்டில் பெரிதான அளவுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். மாமன்ற உறுப்பினர் ஆதிஸ்ரீதர் பொதுமக்கள் சார்ந்த பிரச்னைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு சரியாக கொண்டு வரவில்லை. இருந்தாலும், அந்த வார்டு அளிக்கும் மனுக்கள் குறித்து உடனடியாக விசாரித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி உள்ளோம்” என்றார்.
ஈரோட்டில் தி.மு.க.-வுக்குள் இருக்கும் உட்கட்சிப் பிரச்னை தற்போது பிளக்ஸ் பேனரால் வெளிவந்துள்ளது