கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் தன் நண்பர்களுடன் இணைந்து ‘GROKR’ என்ற ஆப்பை உருவாக்கியுள்ளார். அது கிரிப்டோ கரன்சியை மையப்படுத்தி தொடங்கப்பட்டது. அதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டியுள்ளனர். நம்பி சென்ற மக்களிடம்,

“நாங்கள் அமெரிக்கா நிறுவனம். அதனால் டாலரில் தான் முதலீடு செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் 1,000 – 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளனர். சிறிது காலம் முதலீட்டுக்கான லாபத்தை டாலராகவே திருப்பிக் கொடுத்து வந்தனர்.
ஆனால் அந்த பணத்தை எடுக்க விடாமல் மீண்டும் மீண்டும் முதலீடு செய்ய வைத்துள்ளனர். பலரும் தங்களின் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் முதலீடு செய்தனர். அதனுடன் தங்களுக்குக் கீழ் 25 நபர்களை இணைத்தால் 100 டாலர், 150க்கும் மேற்பட்டோரை இணைத்தால் 1,200 டாலர் தருவோம் என்று ஆசை காண்பித்துள்ளனர்.

முதலீடு செய்வோரை நம்ப வைப்பதற்காக ஆரம்பத்தில் அவர்கள் பெரிய உணவகங்களுக்கு அழைத்து சென்று விருந்தளித்துள்ளனர். இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் அதில் முதலீடு செய்தனர்.
பெண்களை கவருவதற்காக பல திட்டங்களை அறிவித்து, தங்க நெக்லஸ் மற்றும் செயின் வழங்குவதாக வலை விரித்துள்ளனர். திடீரென ஆப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பணத்தை எடுக்க முடியாததால் ஹேமந்த் பாஸ்கரிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர் முறையாக பதிலளிக்காததால் பாதிக்கப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.