வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இன்று தகவல் பரிமாற்றம் என்பது மிக வேகமாக நடக்கிறது, நாம் நினைத்த உடன் ஒருவருடன் அலைபேசியில் தொடர்புகொள்ள முடிகிறது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள எண்ணற்ற சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ளன.
ஆனால் அதற்கு முன்பு??
ஒரு மிதிவண்டியின் மணி சத்தத்தை எதிர்பார்த்து நம் இல்லங்கள் காத்திருந்தன , ஆம் அது தபால்களை, தகவல்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரரின் மிதிவண்டியின் சத்தம் தான் அது.
ஒரு மகிழ்ச்சியான செய்தியா? அல்லது வருத்தம் தரும் செய்தியா? இல்லை நாம் எதிர்பார்த்த கடிதமா? என்ற சிந்தனையில் தொடங்கி, அந்த கடிதத்தை பிரிப்பது யார்? படிப்பது யார்? என்று சண்டையிட்டு, இறுதியில் கடித்தை ஒருவர் படிக்க “என்னை பற்றி விசாரிச்சு இருக்காரா? எப்போ வரேன்னு சொன்னாரு? மறுபடியும் எப்போ கடிதம் எழுதுவார்?” என்று அவரை படிக்க விடாமல் தொல்லை செய்த நாட்களை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

இன்றும் நாம் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கின்ற அஞ்சல் அலுவலகத்தை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்,
1. இந்தியாவில் மத்திய அரசால் இயக்கப்படும் இந்திய அஞ்சல், 1854 ஆம் ஆண்டு அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசி பிரபுவால் நிறுவப்பட்டது. 169 ஆண்டுகள் கடந்து இன்றும் மக்களுக்கு தன் சேவையை வழங்கி வருகிறது.
2. சுமார் 1.59 லட்சம் தபால் நிலையங்களுடன், உலகிலேயே மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது.

3. ஆசியாவின் முதல் ஒட்டக்கூடிய தபால் தலை (stamp) “சிண்டே டாக்”, 1852 ஜூலை 1 அன்று சிந்து மாகாணத்தில் அறிமுகம் செய்யபட்டது.
4. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் முத்திரையில் இந்திய மூவர்ணக் கொடியின் படம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு முத்திரையில் தோன்றிய முதல் ஆளுமை மகாத்மா காந்தி ஆவார்.
5. இந்தியாவில் எந்த அஞ்சல் முகவரியும் அஞ்சல் குறியீட்டு எண் (PIN – Postal Index Number) இல்லாமல் முழுமையடையாது. இந்த அஞ்சல் குறியீட்டு எண் 5 ஆகஸ்ட் 1972 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
6. கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது உலகின் மிக உயரமான தபால் நிலையம். இது ஹிக்கிம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் ஒரே மிதக்கும் தபால் நிலையம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் (dal lake) நீரின் மேல் அமைத்துள்ளது. “மிதக்கும் தபால் அலுவலகம்” என்று அழைக்கப்படும் இது உண்மையில் ஒரு படகு இல்லம், இது தபால் அலுவலகம் மற்றும் தபால்தலை (முத்திரைகளின் சேகரிப்பு) அருங்காட்சியகமாக செயல்படுகிறது.
8. உலகின் முதல் அதிகாரப்பூர்வ ஏர்மெயில் – விமானம் 18 பிப்ரவரி 1911 அன்று அலகாபாத்தில் இருந்து புறப்பட்டு நைனி வரை 18 கி.மீ தூரம் தபால்களை கொண்டு சென்றது.
9. 9 இல் தொடங்கும் அனைத்து அஞ்சல் குறியீட்டு எண்களும் (PINகள்) இந்திய இராணுவ தபால் நிலையங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
10. கிராமப்புறங்களில் இந்திய அஞ்சல் துறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான வங்கி வசதிகள் குறைந்த அல்லது அணுகல் இல்லாத மக்களுக்கு இது வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குகிறது.

11. இந்திய தபால் அலுவலகம் ஸ்பீட் போஸ்ட் (Speed Post) எனப்படும் வேகமான மற்றும் நம்பகமான கூரியர் சேவையை வழங்குகிறது. இது கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விநியோக சேவைகளை வழங்குகிறது.
12. புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இந்தியாவின் முதல் அனைத்து பெண் ஊழியர்களுக்கான தபால் அலுவலகம் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
13. இந்திய அஞ்சல் அலுவகங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல், சேமிப்பு கணக்குகள், வைப்பு நிதிகள், பத்திரங்கள், காப்பீடுகள், பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம்… என பலவிதமானாக சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது.

14. அண்டார்டிகாவில் Dakshin Gangotri PO என்ற பெயரில் ஒரு இந்திய தபால் நிலையம் இருந்தது. இது 1984 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிற்கு மூன்றாவது இந்திய பயணத்தின் போது நிறுவப்பட்டது. இதுவே இந்திய எல்லைக்கு வெளியே அமைக்கப்பட்ட முதன்மை இந்திய தபால் அலுவலகமாகும்.
இவை அனைத்தும் இந்திய தபால் அலுவலகத்தைப் பற்றிய ஒருசில சுவாரஸ்யமான உண்மைகள் மட்டுமே. இது ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது, நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் நிதி அமைப்புகளில் இன்றும் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.