எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.

எஸ்-400 என்றால் என்ன?

எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும்.

2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்தியா முதல்முறையாக வாங்கியது.

இது கடந்த மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்துவில் இந்திய ராணுவத்தில் மிக முக்கிய பங்காற்றியது.

அதை கருத்தில் கொண்டுதான், இந்த எஸ்-400-ஐ மீண்டும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

எஸ்-400 | S-400
எஸ்-400 | S-400

2018-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா – ரஷ்யா ஒப்பந்தத்தின்படி, ஐந்து எஸ்-400 வாங்கப்பட்டன. ஆனால், இதுவரை மூன்று எஸ்-400 தான் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்க உள்ளது.

இந்த நிலையில் தான், இந்தியா அடுத்த பேட்ச் ஐந்து எஸ்-400-ஐ வாங்க முடிவு செய்துள்ளது.

புதின் வருகை

வரும் டிசம்பர் மாதம், ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவிருக்கிறார். அப்போது இது குறித்தான ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த எஸ்-400 வாங்குவது குறித்து இந்த வாரம் இந்திய அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

அமெரிக்காவின் பிரச்னை

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதால், அமெரிக்கா இந்தியா மீது 25 சதவிகித வரி மற்றும் கூடுதல் வரியை விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா மீண்டும் ரஷ்யாவுடன் பெரிய அளவில் ராணுவ தளவாடங்கள் விஷயத்தில் வர்த்தகம் செய்ய உள்ளது.

ஏற்கெனவே 2018-ம் ஆண்டு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வாங்கும்போதும், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்பே இப்போதும் அமெரிக்க அதிபராக இருக்கிறார். அப்போது இதை கடுமையாக எச்சரித்திருந்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதாவது, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இந்த அமைப்பை வாங்கினால், இந்தியா மீது CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) என்கிற சட்டத்தின் மூலம் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா (ட்ரம்ப் அரசு) எச்சரித்திருந்தது. அதையும் மீறித்தான், இந்தியா அப்போது எஸ்-400-ஐ வாங்கியிருந்தது.

இப்போது எதுவாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் வரிகளை வைத்தே கையாண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியாவின் இப்போதைய நகர்வை ட்ரம்ப் எப்படி கையாளப்போகிறார்?