கொல்கத்தா: பாஜக எம்.பி மீது கல்வீச்சு; ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதி; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு மீது உள்ளூர்வாசிகள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெரும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாதிப்புகள் ஏற்பட்டு பலரும் பலியாகியிருந்தனர்.

பாஜக எம்.பி.யின் மீது கல்வீச்சு
பாஜக எம்.பி.யின் மீது கல்வீச்சு

இந்நிலையில் இன்று, இந்த வெள்ள பாதிப்பிற்காக தனது மால்டா மாவட்டத்தில் நிவாரணம் கொடுக்கச் சென்ற எம்.பி காகன் முர்மு, செல்லும் வழியிலேயே உள்ளூர்வாசிகள் 50 பேரால் இடைமறிக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்த மக்கள் ‘திரும்பிச் சென்றுவிடு’ என்று கோஷத்துடன் கல்வீச்சில் ஈடுபட, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்தக் கல்வீச்சு சம்பவத்தில், காகன் முர்முவின் தலையில் கல் வீசப்பட்டு, மண்டை உடைந்து ரத்த வெள்ளமானது. ரத்தம் வழிய பாதுகாவலர்கள் உதவியால் அவர், அங்கிருந்து பாதுகாப்பாகக் கூட்டிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருடன் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. சங்கர் கோஷும் காயமடைந்திருக்கிறார்.

பாஜக தலைவர்கள் பலரும் காகன் முர்முவை நலம் விசாரித்து, இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

பாஜக குற்றச்சாட்டுகள்

பாஜகவினர், இது முழுக்க முழுக்க ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

தாக்குதலுக்குப் பிறகு பேசிய காகன் முர்மு, “திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறை கண் முன்னாலேயே இந்த வன்முறை அரங்கேறியது. இது ஜனநாயகத்தின் மீதான ஒரு கொடூரமான தாக்குதல்,” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள்

ஆனால், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இந்தத் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பாஜகவின் உட்கட்சிப் பூசல் அல்லது உள்ளூர் மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்,” என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ள பாதிப்பின்போதும், வேறு பல தொகுதி பிரச்னையின்போதும் எம்.பி காகன் முர்மு தனது தொகுதி பக்கமே வரவில்லை என்றும் எம்.பியான பின்பு தொகுதியை கண்டுகொள்ளததால் அப்பகுதி மக்கள் கோபத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். காவல்துறை வழக்குப் பதிவு செய்து இதன் பின்னணி குறித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.