குகேஷுக்கு அமெரிக்க வீரர் செய்தது சரியா? வைரல் வீடியோவின் பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியா – அமெரிக்கா நாடுகள் மோதிக்கொண்டன.

இதில் இந்தியா சார்பில் இளம் செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்கா தரப்பில் ஹிகாரு நகாமுராவும் கலந்துகொண்டனர். 10 நிமிட மற்றும் 5 நிமிட ரேபிட் பிரிவுகளில் குகேஷ் நகாமுராவை டிராவில் நிறுத்த முடிந்தது.

இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை ஹிகாரு நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வென்றவர் தோற்றவரிடம் கை குலுக்குவதோ, அல்லது தலையசைத்து விடைபெறுவது என்ற வழக்கம் இருக்கிறது.

ஆனால், ஹிகாரு நகாமுரா வெற்றிப் பெற்றதும் குகேஷின் கிங் காயினைத் தூக்கி பார்வையாளர்களிடம் வீசினார். அவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்றும், சிலர் செஸ் போட்டிக்கே நடந்த மரியாதைக் குறைவு என்றும் விமர்சித்தனர்.

இது தொடர்பாக விளக்கமளித்த ஹிகாரு நகாமுரா,“போட்டி தொடங்கும்போதே நான் வென்றால் ராஜாவை தூக்கி வீசவேண்டும் என நினைத்திருந்தேன். மேலும், இது ஒரு வியத்தகு புல்லட் விளையாட்டு என்பதால் நான் வீசியது பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.