‘ஹெச்-1பி விசா அதிக கட்டணம் விரைவில் ரத்தா?’ – அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் சொல்லும் காரணம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார்.

அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இது இந்தியாவில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. காரணம், இந்த விசாவை விண்ணப்பிக்கும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்களே.

சார்லஸ் கக்
சார்லஸ் கக்

ஏன் செல்லாது?

இந்த நிலையில், ‘இந்த அறிவிப்பு செல்லாது’ என்று அமெரிக்காவின் குடிவரவு வழக்கறிஞர் சார்லஸ் கக், “புதிய வரிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் எந்த அதிபருக்கும் இல்லை. அதனால், ஹெச் 1பி விசாவிற்கான 1 லட்ச டாலர்கள் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விசா கட்டணத்திற்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை என்ன கூறுகிறது?

இந்தக் கட்டண உயர்வு சட்ட ரீதியானது தான் என்று வெள்ளை மாளிகை தரப்பு கூறுகிறது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை தட்டி பறிக்காமல் இருக்கவும், அவர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது.

ஆனால், இதை அமெரிக்காவின் சட்ட நிபுணர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.