உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.

இப்போதிருக்கும் நடைமுறை

அதன் பின், ஃபாஸ்ட் டேக் இல்லாமலோ அல்லது எக்ஸ்பைரி ஆன ஃபாஸ்ட் டேக்குகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தால், பொதுவான சுங்கச்சாவடி கட்டணத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஒரு சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் இருக்கும் காருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டால், அது இல்லாத கார் ரூ.200 செலுத்த வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

புதிய நடைமுறை

இதை மாற்றி தற்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.

அதன் படி, ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்கள் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் இனி 1.25 மடங்கு தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

அதாவது, (மேலே குறிப்பிட்டுள்ள உதாரணத்தின் படி) இந்த வாகனங்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை யு.பி.ஐ மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.

இந்த நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் அமலாக உள்ளது.