சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார்; காரணம் என்ன?

கடந்த அக்டோபர்  27ஆம்  தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

மேலும் சில தவெக தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்களைப் பதிவிட்டதாகவும், அதனை நீக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் சென்றிருக்கின்றனர். அதாவது தவெக ஐடிவிங்கில் உள்ள கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பறிமுதல் செய்வதற்காக ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.