பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?

நேற்று அமெரிக்கா நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்த பிறகு, இதுவே இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல்முறை ஆகும்.

ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ
ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ

இந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

‘நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

எங்களது உரையாடல் இருதரப்பு மற்றும் தற்போதைய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருந்தது.

முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் காணத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான அவசியம் குறித்து ஒப்புக்கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்கோ ரூபியோ பதிவிட்டிருப்பதாவது…

“இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சந்தித்தேன்.

நாங்கள் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இன்னும் அதிகமான வளங்களைப் பெருக்குவது குறித்தும் பேசினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.