ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய துரை வைகோ, “இந்த மாநாடு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. பெரியார், அண்ணா பங்களிப்பு இல்லை என்றால் இந்த மண்ணில் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணுரிமை, இரு மொழி கொள்கை என எதுவும் இல்லாமல் போயிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அண்ணாவின் சித்தாந்தம்தான் காரணம்.
ஆங்கில மொழியைத் தவிர்த்து விட்டு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்த வட மாநிலங்களின் நிலை நமக்குத் தெரியும். இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள்.
தமிழக மாணவ, இளைஞர்கள் மீது ஒன்றிய அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடித்தளத்தைத் தகர்த்து விட்டு, பன்முக கலாசாரத்தை அகற்ற பா.ஜ.க முயல்கிறது. இந்தியைத் திணிப்பதன் மூலம் தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு முழுமையாகவும், முறையாகவும் வழங்குவதில்லை. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்கிறார்கள்.

சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவியைப் பறிக்கலாம் என்கிற மசோதாவை எந்தவித விவாதமுமின்றி நிறைவேற்றி உள்ளார்கள். இது, பாசிச சட்டம். எதிர்கட்சிகள்/ ஆளும் மாநில அரசுகளை மிரட்ட தான் இதைப் பயன்படுத்துவார்கள்.
இந்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு திரும்ப பெற வேண்டும். ம.தி.மு.க-வை அழிக்க 32 ஆண்டுகளாகச் சிலர் முயற்சித்தார்கள். அது, அப்போது முடியவில்லை. இப்போதும் முடியவில்லை… எப்போதும் முடியாது. நான் விழப்போவதுமில்லை, நீங்கள் வீழபோவதுமில்லை. ம.தி.மு.க எப்போதும் வீழப்போவதில்லை” என்றார்.
துரை வைகோ தன் பேச்சின் போது இடையே மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கு நன்றி கூறினார். அப்போது, அவர் கண் கலங்கினார்.