ட்ரம்ப்பின் நண்பர் கொலையைத் தொடர்ந்து RCB Ex கேப்டன் எழுப்பிய முக்கிய கேள்வி; என்ன கேட்கிறார்?

அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் கைகளிலும் துப்பாக்கி எளிதாகப் புழக்கத்தில் இருக்கிறது.

இந்த ஆபத்தான துப்பாக்கி கலாசாரத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.

இத்தகைய சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரும், தீவிர வலதுசாரி ஆதரவாளருமான வெறும் 31 வயதான சார்லி கிர்க் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்ரம்ப் - சார்லி கிர்க்
ட்ரம்ப் – சார்லி கிர்க்

நேற்றைய தினம் உடா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் சார்லி கிர்க் உரையாற்றிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சார்லி கிர்க்கின் இத்தகைய மரணத்தைத் தொடர்ந்து ட்ரம்ப், கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

தன்னுடைய அந்தப் பதிவில், “சார்லி கிர்க் ஆன்மா சாந்தியடையட்டும். அமெரிக்காவை புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்காக எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்” என்று டு பிளெஸ்ஸிஸ் தனது கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

அமெரிக்க ஊடகங்களின் தரவுகளின்படி, அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 125 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.